எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 12 நவம்பர், 2012

வஸீ்ம் அக்ரம் கவிதைகள் மூன்று

1. மறக்க முடியாத காலைப் பொழுது
மரபுகளின் மாறிலியாய்
துயர நொடிகளை கடந்து
எனது விடியலின் நிறப் பொலிவை
உறங்கச் செய்கின்ற
எனது மறக்க முடியாத காலை, அது
எனக்குள் ஒளிர்ந்து இசைக்கின்ற பொழுதை
கொளித்தி அந்த உஷ்ணச் சுவையை
உண்டு மகிழ்ந்தது, அந்தக் காலை
என்னை அவிழ்த்துப் போட்டு
ஓடத்துவங்கினேன்
இறந்தவனின் பேய்க் காற்று
பைத்தியக்காரனின் உலரல்
என் மீது நிரம்பிப் பாய்ந்தது
வாழ்வின் இறுதிக் காட்சிகளுக்குள் ஓடியது
அந்த மறக்க முடியாத காலை
அது வசந்த விருட்சங்களுக்கு தீ மூட்டியது
என் புதிய காணங்களையும்
என் புதிய கனாக்களையும்
காற்றிடமிருந்து மீட்டெடுத்தேன்
எனது துக்கத்தின் தூதை காற்றில்
சிறகு உடைந்த பறவையாக்கி பறக்க விடுகிறேன்
அது தவழ்ந்து தவழ்ந்து பறத்தலுக்காய் போராடியது
எனது ஆத்மத்தை சுவரில் அறைகிறேன்
காலை எனக்கு கொடுரமான
செய்தியைக் கொண்டு வந்தது
அது வாழ்வில் மறக்க முடியாதது காலை

2. ஒக்டோபர் கறுப்பு

இரு தசாப்த
வரலாற்று வரைபடமிது
சற்று இழிவான பொழுதுகளிலே விழிக்கின்றோம்
இரவு புடைத்து தொங்கிய வானில்
ஒரு நட்சத்திரமாவது இருக்கவில்லை.
ஊனக் கண்களின் நட்சத்திரக் கனவுகள்
எங்கள் முகாம்ங்களைப் போல்
இருள் கவ்விக் கிடந்தன
வாழ்வின் எல்லா சுற்றுக்களுமாய்
நடந்த தடங்கள் மட்டும் மாறியிருக்க
கால் தடையம் அப்படியே
காயச் சுமைகளாக
காலத்தை கசக்கி எரிகின்றது

3. வசந்தம் விரியும் வரை
எனது தே(ந)சத்தின் கதவுகளை தட்டுகிறேன்
என்னோடு இருக்கின்ற இரகசியங்களை அழைத்துக் கொண்டு
கைவிடப்பட்ட எனது நிலத்தின் மீது
நே(த)சக் கரங்களை நீட்டுகிறேன்
நூற்றாண்டாய்ப் புதையுண்டு போன நிலத்தில்
இரத்த உறவுகளின் நேசங்களை
போரின் பிந்திய இழப்புக்களை
பரிவர்த்தணை செய்து
அழுகின்றது எனது ஆத்மா
மணல்ச் சாரல் வீசிக் கொண்டிருக்கின்றது
துர் நாற்றக் கட்டிலில்
புழுதிப் படுக்கையை விரித்து
ஒரு சொறி நாயுடன்
உறங்கிய இந்த இரவுகளை
எண்ணியே பித்தம் கசிகின்றது எனக்கு
இன்னும்
சிறு கற்கள் கொண்டு நிரப்பி
புதிய நாளுக்கான வார்ப்புகளை
கெஞ்சுகின்றது
நம்பிக்கை இழந்து
துயர் பச்சை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது
இனியாவது
வசந்த பூபாளக் காற்று வீசி
என் காலத்தில் காய்கின்ற
உலர்ந்த நாட் துணிகளை
உலர்த்திவிட்டு
வசந்த பூக்களுக்கு உரமூட்டுகின்றதா?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக